Why Puritan Thomas Watson Took Sin Seriously and So Should We - By Scott ராபர்ட்ஸ். தாமஸ் வாட்சன் ஏன் பாவத்தை தீவிரமாகக் கருதினார்? நாமும் ஏன் அவ்வாறே கருத வேண்டும்? - ஸ்காட் ராபர்ட்ஸ்.
முந்தைய காலத்து கிறிஸ்தவர்களுக்கும் இன்றைய பல கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள மிகத் தெளிவான வேறுபாடுகளில் ஒன்று, அவர்கள் பாவத்தை எவ்வளவு தீவிரமாகக் எடுத்துக்கொண்டார்கள் என்பதே.
விசுவாசிகள் பாவத்தைப் பற்றித் தெளிவாகப் பேசவும், அதை நேர்மையாக அறிக்கையிடவும், திட்டமிட்டு அதற்கு எதிராகப் போராடவும் செய்த ஒரு காலத்தில் தாமஸ் வாட்சன் வாழ்ந்து எழுதினார். ஆனால் இன்று, பாவம் பெரும்பாலும் பெயர் மாற்றப்பட்டோ, குறைத்து மதிப்பிடப்பட்டோ அல்லது சப்பைக் கட்டுகள் சொல்லியோ நியாயப்படுத்தப்படுகிறது. அதற்கு பலவீனம், போராட்டம் அல்லது உடைந்த நிலை போன்ற வார்த்தைகளையே நாம் விரும்புகிறோம். அந்த வார்த்தைகள் உண்மையாக இருக்கலாம், ஆனால் வேதாகமம் எதை வெளிப்படையாகச் சொல்லுகிறதோ, அதை அவை மென்மையாக்கிவிடுகின்றன.
வாட்சன் ஒருபோதும் அப்படிச் செய்திருக்க மாட்டார். பாவம் என்பது ஒரு துரதிர்ஷ்டவசமான செயல் மட்டுமல்ல, அது அழிவை உண்டாக்கக்கூடியது என்று அவர் நம்பினார். அது தேவனை அவமதிக்கும் காரியமாகவும், மனந்திரும்பாமல் விடப்படும்போது ஆத்துமாவைக் கொல்லும் விஷமாகவும் இருக்கிறது.
ஆனாலும், மனச்சோர்வை உண்டாக்குவதற்காக வாட்சன் பாவத்தைப் பற்றி எழுதவில்லை. மாறாக, மனந்திரும்புதலையும், தாழ்மையையும், கிறிஸ்துவின் கிருபைக்காக நன்றியுணர்வையும் பெருகச் செய்வதற்காகவே அவர் எழுதினார்.
பாவம் தேவனுக்கு எதிரான குற்றம்
வாட்சன் பாவத்தின் தீவிரத்தன்மை யாருக்கு எதிராக அது இழைக்கப்படுகிறது என்பதிலிருந்தே தொடங்குகிறது என்று நம்பினார்.
இக்காலத்தவர் பாவத்தை அதன் வெளிப்படையான விளைவுகளால் அளவிடுகின்றனர். யாருக்கும் வெளிப்படையாகத் தீங்கு ஏற்படவில்லையெனில், அந்தப் பாவம் சிறியதாகத் தோன்றுகிறது. வாட்சன் பாவத்தை வேறுவிதமாக அளவிட்டார். அவர் அதை தேவனுடைய பரிசுத்தத்தால் அளவிட்டார்.
மனந்திரும்புதலின் உபதேசம் என்னும் நூலில் வாட்சன் எழுதுகிறார்:
“பாவம் என்பது எல்லாத் தீமைகளின் ஒரு தொகுப்பு. அது தீமையின் சாராம்சமாகும். அது தேவனுடைய சாயலைச் சிதைத்து, நம்முடைய மகிமையைக் களங்கப்படுத்தி, ஆத்துமாவைப் பாழாக்கி விடுகிறது.”
பாவம் என்பது வெறும் கட்டளைகளை மீறுவது மட்டுமல்ல என்பதை வாட்சன் உணர்ந்திருந்தார். நம்மைப் படைத்து, நம்மைக் காத்து, தமக்குரியவர்களாய் நம்மை அழைத்துக்கொண்ட தேவனுக்கு விரோதமான கலகமே பாவம். மற்றவர்கள் காணாத இரகசியப் பாவங்களும் தேவனுடைய கண்களுக்கு முன்பாக முழுமையாகத் திறந்திருக்கின்றன.
இந்தக் கண்ணோட்டம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. பாவம் சாதாரணமாக இருக்கிறது என்பதற்காக அது சிறியதாகிவிடாது.
பாவத்தின் வஞ்சகம்
பாவம் என்பது தவறான காரியம் என்பதற்காக மட்டுமல்ல, அது வஞ்சனை நிறைந்தது என்பதற்காகவும் ஆபத்தானது என்று வாட்சன் அடிக்கடி எச்சரித்தார்.
பாவம் அரிதாகவே தனது உண்மையான உருவத்தில் நம்மிடம் வருகிறது. அது இன்பத்தையும், விடுதலையையும், நிம்மதியையும், அதிகாரத்தையும் தருவதாக வாக்குறுதி அளிக்கிறது. அது தான் தரும் பாதிப்புகளை மறைத்துவிட்டு, தான் தரும் பலனை மிகைப்படுத்திக் காட்டுகிறது.
வாட்சன் எழுதுகிறார்:
"பாவம் முதலில் வஞ்சிக்கிறது, பின்பு அழித்துப்போடுகிறது."
இந்த வாக்கியம் சிறியதுதான், ஆனால் எண்ணற்றோர் அழிந்துபோனதற்கான காரணத்தை இது விளக்குகிறது. பாவம் அழிப்பதற்கு முன்பாக நம்மை வசியப்படுத்துகிறது. அது இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு முன்பாக மனதை மயக்குகிறது.
இதில் கிறிஸ்தவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வாட்சன் நம்பினார். ஒரு விசுவாசி திடீரென்று பெரிய பாவத்தில் விழுந்துவிடுவதில்லை. வீழ்ச்சியானது சிறிய சமரசங்களினாலும், பொறுத்துக்கொள்ளக்கூடிய சிந்தனைகளிலும், அமைதியான நியாயப்படுத்துதல்களிலும் தொடங்குகிறது.
இதனால்தான், பாவம் பலம் பெறுவதற்கு முன்பே, ஆரம்பத்திலேயே அதை எதிர்க்க வேண்டும் என்று வாட்சன் விசுவாசிகளை வலியுறுத்தினார்.
பாவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆவிக்குரிய ஜீவியத்தை எவ்வாறு அழிக்கிறது
பாவத்தைக் குறைத்து மதிப்பிடுவது முழுக் கிறிஸ்தவ ஜீவியத்தையும் பலவீனப்படுத்துகிறது என்பதை வாட்சன் தெளிவாகக் கண்டார்.
பாவம் சிறியதாயிருந்தால், மனந்திரும்புதல் தேவையற்றதாகிறது. மனந்திரும்புதல் தேவையற்றதாகும்போது, கிருபை மலிவானதாகிறது. கிருபை மலிவானதாகும்போது, பரிசுத்தம் மறைந்துபோகிறது.
தெய்வீக உபதேசத்தின் சரீரம் என்னும் நூலில் வாட்சன் கூறுகிறார்:
“பாவம் கசக்கும் வரை, கிறிஸ்து இனிமையாக இருக்க மாட்டார்."
"இந்த கூற்று ஆழ்ந்த போதக தன்மை கொண்டதாய் இருக்கிறது. விசுவாசிகள் தங்களைத்தாமே வெறுக்க வேண்டும் என்றோ, வீணான சிந்தனைகளில் அலைய வேண்டும் என்றோ வாட்சன் போதிக்கவில்லை. மாறாக, நம்மை எதிலிருந்து கிறிஸ்து மீட்டுக்கொண்டார் என்பதை நாம் உணரும்போது, அவருடைய மகிமை நமக்குத் தெளிவாக விளங்கும் என்பதையே அவர் சுட்டிக்காட்டுகிறார்."
பாவத்தைப்பற்றிய மேலோட்டமான பார்வை கிருபையைப்பற்றிய மேலோட்டமான பார்வையை உண்டாக்குகிறது.
பாவம் இருதயத்திலே தொடங்குகிறது
பாவம் என்பது புறம்பான செயல்கள் மட்டுமல்ல, அது இருதயத்திலே தொடங்குகிறது என்பதை வாட்சன் தொடர்ந்து வலியுறுத்தினார்.
அவர் தேவனுடைய கட்டளைகளைக் குறித்து விளக்கும்போது, தேவனுடைய நியாயப்பிரமாணம், மனிதனின் எண்ணங்கள், நோக்கங்கள், விருப்பங்கள் மற்றும் சிந்தனைகளையும் ஆராய்கிறது என்பதை வாட்சன் காட்டுகிறார். ஒரு செயல் வெளிப்படையாகத் தெரிவதற்கு முன்பே, இருதயம் ஏற்கனவே அச்செயலுக்குச் சம்மதித்துவிடுகிறது.
இதனால்தான், ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதை இருதயத்திலே செய்த விபச்சாரம் என்றும், மற்றவரை வெறுப்பதை இருதயத்திலே செய்த கொலை என்றும் இயேசு கூறுகிறார். பாவத்திற்கு எதிரான போராட்டம் புறம்பான செயல்களில் மட்டுமல்ல, உள்ளான இருதயத்திலும் நடக்க வேண்டும் என்பதை வாட்சன் அறிந்திருந்தார்.
தன் நடத்தையை மட்டும் கட்டுப்படுத்தி, தன் உள்ளான விருப்பங்களை எதிர்கொள்ளாத எவனும் ஒருநாள் நிச்சயம் விழுந்துபோவான்.
கிறிஸ்தவ வாழ்க்கை இத்தகைய நேர்மையைக் கோருகிறது என்று வாட்சன் நம்பினார். நம்மை நாமே சோதித்தறியவும், நம்மிடம் உள்ளதை அறிக்கையிடவும், மாறுவதற்கு ஆவியானவரின் உதவியை நாடவும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
பாவத்தை நேசிப்பதிலுள்ள ஆபத்து
பாவத்தோடு போராடுவதற்கும், பாவத்தை நேசிப்பதற்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசத்தை வாட்சன் சுட்டிக்காட்டுகிறார்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் போராடுகிறான். மிகவும் முதிர்ச்சியடைந்த விசுவாசிகள் கூட தங்களுக்குள் தங்கியிருக்கும் எஞ்சியுள்ள பாவத்தோடு போராடுகிறார்கள். ஆனால், இருதயத்தின் நோக்கம் முக்கியமானது.
வாட்சன் இவ்வாறு கூறுகிறார்:
"ஒரு துன்மார்க்கன் பாவத்தை நேசிக்கிறான்; ஒரு தேவபக்தியுள்ளவன் அதை வெறுக்கிறான்."
- Thomas Watson, The Godly Man’s Picture
இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. பாவம் இருப்பதாலேயே ஒருவன் இழந்துபோனவன் என்று அர்த்தமல்ல. ஆனால், மனந்திரும்புதல் இன்றி பாவத்தை நேசிப்பது எந்தவொரு ஆத்துமாவையும் எச்சரிக்க வேண்டிய காரியமாகும்.
கிருபையின் மிகத்தெளிவான அடையாளங்களில் ஒன்று பரிபூரணமடைவதல்ல, மாறாக பாவத்தின் மேல் வளர்ந்துவரும் வெறுப்பும், பரிசுத்தத்தின் மேல் வளர்ந்துவரும் நேசமுமே என்று வாட்சன் நம்பினார்.
பாவம் ஏன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறது?
பாவத்தினால் ஏற்படும் இருதயக் கடினத்தன்மை குறித்து வாட்சன் அடிக்கடி வலியுறுத்துகிறார்.
பாவம் ஒருபோதும் நடுநிலையானதாக இருப்பதில்லை. அது ஒன்று மனந்திரும்புதலை அதிகப்படுத்தும், அல்லது உணர்திறனைக் குறைக்கும். கவனிக்கப்படாத மனசாட்சி மெல்ல அமைதியாகிவிடும். எதிர்க்கப்படும் குற்ற உணர்வு, நாளுக்கு நாள் பலவீனமடைந்துவிடும்.
வெளிப்படையான கலகத்தில் இருப்பதைவிட, பாவத்தோடு சௌகரியமாக வாழ்வதே ஒரு மனிதனுக்கு மிகவும் ஆபத்தானது என்று வாட்சன் எச்சரிக்கிறார்.
எந்தப் போராட்டமும், குற்ற உணர்வும், மனந்திரும்புதலுக்கான தவிப்பும் இல்லாத ஒருவன் ஆவிக்குரிய ஆரோக்கியத்துடன் இல்லை; அவன் ஆவிக்குரிய மரத்துப்போன நிலையில் இருக்கிறான்.
அத்தகையவர்கள் தயங்காமல், காலம் தாழ்த்தாமல், மனந்திரும்புவதற்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளாமல் உடனடியாகத் தேவனிடம் திரும்ப வேண்டும் என்று வாட்சன் வலியுறுத்துகிறார்.
மனந்திரும்புதல்: வாழ்நாள் முழுமைக்குமான பயிற்சி
மனந்திரும்புதலை இரட்சிப்புக்குரிய ஒருமுறை நிகழ்வாக மட்டும் வாட்சன் கருதவில்லை. அதை அவர் வாழ்நாள் முழுமைக்குமான பயிற்சியாகப் பார்க்கிறார்.
'மனந்திரும்புதலின் உபதேசம்' (The Doctrine of Repentance) என்ற நூலில், மனந்திரும்புதலை ஒரு கிருபையாக அவர் விவரிக்கிறார்; அது கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டியது. விசுவாசிகள் மீண்டும் மீண்டும் பாவம் அறிக்கை செய்து, தேவனிடம் திரும்பி, சுத்திகரிப்பைத் தேடுகிறார்கள்; இது மீண்டும் இரட்சிக்கப்படுவதற்காக அல்ல, மாறாக தேவனுடன் நெருக்கமாய் நடப்பதற்காகவே.
மனந்திரும்புதல் இருதயத்தை மென்மையாக வைத்திருக்கிறது. அது அகங்காரத்தை அடக்கி, மனசாட்சியை விழிப்புடன் வைத்திருக்கிறது.
மனந்திரும்புவதை நிறுத்திவிடுகிற ஒரு கிறிஸ்தவன், வளர்ச்சியையும் விரைவில் நிறுத்திவிடுகிறான்.
கிருபை பாவத்தைப் பாதுகாப்பானதாக்காது
கிருபையின் உபதேசத்தில் வாட்சன் மிகுந்த உறுதியோடு இருந்தார். விசுவாசத்தினால் உண்டாகும் நீதிமானாக்கப்படுதலையும், கிறிஸ்துவின் பரிபூரணத்தையும் அவர் பிரசங்கித்தார். ஆனால், கிருபை பாவத்தைப் பாதுகாப்பானதாக்கிவிடும் என்ற எண்ணத்தை அவர் கடுமையாக மறுத்தார்.
கிருபை பாவத்தின் ஆபத்தை நீக்கிவிடுவதில்லை; அது விசுவாசிக்குரிய ஆக்கினைத்தீர்ப்பை மட்டுமே நீக்குகிறது. பாவம் இன்றும் ஐக்கியத்தைப் பாதிக்கும், விசுவாச நிச்சயத்தை பலவீனப்படுத்தும், ஆவியானவரைத் துக்கப்படுத்தும்.
கிருபையைப் பற்றிய சரியான புரிதல் ஒருவனை அலட்சியத்திற்கு இட்டுச் செல்லாது. அது நன்றியுணர்வையும் கவனமான கீழ்ப்படிதலையுமே தரும்.
கிருபையை உணர்ந்த இருதயம், எவ்வளவு பாவம் செய்யலாம் என்று கேட்பதில்லை; மாறாக, தேவனுடன் எவ்வளவு நெருக்கமாக நடக்க முடியும் என்றே தேடுகிறது.
இன்றைய கிறிஸ்தவர்களுக்கு வாட்சனின் தெளிவு ஏன் தேவை?
பாவத்தைப் பற்றிய வாட்சனின் தீவிரத்தன்மை இன்றைய வாசகர்களுக்கு ஒருவேளை சங்கடமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சங்கடமே நம் இருதயத்தின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நாம் குற்றம் சாட்டுவதைத் தவிர்க்கும், பொறுப்புணர்வை எதிர்க்கும், கண்டனத்தைவிட பாராட்டுதலையே விரும்பும் ஒரு கலாச்சாரத்தில் வாழ்கிறோம். அந்த மனநிலை இன்று சபைகளுக்குள்ளும் எளிதாக ஊடுருவிவிட்டது.
வாட்சன் நம்மை மீண்டும் யதார்த்தத்திற்கு அழைக்கிறார். பாவம் என்பது மெய்யானது. பரிசுத்தம் அவசியம். மனந்திரும்புதல் கட்டாயம். கிருபை என்பது விலைமதிப்பற்றது.
இந்த உண்மைகள் இல்லையெனில், கிறிஸ்தவம் வெறும் உணர்ச்சிவசப்பட்டதாகவும், வல்லமையற்ற ஒன்றாகவும் மாறிவிடும்.
முடிவுரை
தாமஸ் வாட்சன் பாவத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டார், ஏனெனில் அவர் தேவனைத் தீவிரமாக எடுத்துக்கொண்டார். அவர் பரிசுத்தத்தையும், நித்தியத்தையும், சிலுவையையும் தீவிரமாகக் கருதினார்.
பாவத்தைப் பற்றிய தாழ்ந்த பார்வை எப்போதும் கிறிஸ்துவின் மீதான தாழ்ந்த பார்வையையே உண்டாக்கும். ஆனால், பாவத்தைப் பற்றிய தெளிவான பார்வை, கிறிஸ்துவின் கிருபையை இன்னும் பிரகாசமாக ஜொலிக்கச் செய்யும்.
நாம் சோகத்திலோ அல்லது சோர்வான மனநிலையிலோ மூழ்கிவிடத் தேவையில்லை; மாறாக, நாம் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.
நம் இருதயத்தைப் பொறுத்தவரை நேர்மையாகவும், நம் தேவை குறித்து நேர்மையாகவும், நம்மை இரட்சிக்கும் இரக்கத்தைக் குறித்து நேர்மையாகவும் இருக்க வேண்டும்.
அத்தகைய நேர்மைக்கு வாட்சனின் குரல் இன்றும் நம்மை அழைக்கிறது.
This article has been translated from English into Tamil with permission.
Scott Roberts is a dynamic Christian leader, writer, and church elder/pastor at Bayfair Baptist Church in Pickering, Ontario.

Comments
Post a Comment