பரிசுத்தவான்களுக்கு ஏற்படும் சோதனைகள், அவர்களுடைய நன்மைக்கே - தொமஸ் வாட்சன்.




 "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." (ரோமர் 8:28).

கர்த்தர் தமது ஜனங்களுக்கு நியமிக்கிற அநேக பாடுகளிலும் சோதனைகளிலும், பாவத்திற்குத் தூண்டுகிற சாத்தானுடைய சோதனைபோல, இடைவிடாது தொந்தரவு செய்து ஆத்துமாவை வருத்துகிறவை மிகக்குறைவே.

கிறிஸ்தவன் உலகத்தாலும் சரீரத்தாலும் மட்டுமல்ல, ஒரு தனிப்பட்ட, கொடிய எதிரியாலும் எதிர்க்கப்படுகிறான். சாத்தான் சரியாக “சோதனைக்காரன்” என்று அழைக்கப்படுகிறான் (மாற்கு 4:15). அவன் அமைதியில்லாதவன், உபாயமுள்ளவன், கொடூரமானவன் — எப்போதும் கவனித்துக்கொண்டு, எப்போதும் காத்திருந்து, பரிசுத்தவான்களுக்கு எதிராக வலையைப் போடுகிறான். ஆனாலும் இங்கேயும், வேதம் உறுதியான நிச்சயத்துடன் பேசுகிறது: சோதனையே, தம்மை நேசிக்கிறவர்களுக்கு நன்மையாகக் கர்த்தரால் சர்வ ஏகாதிபத்தியமாய் ஆளப்படுகிறது.

பிசாசின் வழிகள் வன்மையானவையும் நுணுக்கமானவையும் ஆகும். ஒரு கொடிய, பறக்கும் வலு சார்ப்பம் போல் அவன் ஆத்துமாவை நெருப்பு அம்புகளால் அதாவது — தூஷணமான எண்ணங்கள், தேவனுடைய நன்மையைக்குறித்த சந்தேகங்கள், விசுவாசத்தின் அடித்தளங்களையே தாக்கும் யோசனைகள் போன்றவற்றால் தாக்குகிறான் (எபேசியர் 6:16). பழைய சார்ப்பம் போல் அவன் அளவுக்கு மிஞ்சிய தந்திரசாலி. அவன், மனோபாவத்தைப் படித்து, தாக்குதல்களை நேரப்படுத்தி, பாவத்தை மதபக்தியுள்ள வார்த்தைகளில் மறைத்து, சில சமயங்களில்p பொன் கிண்ணத்தில் விஷத்தைப் பரிமாறுகிறான்! (2 கொரிந்தியர் 11:14). ஆனால் அவனுடைய தந்திரம் எல்லாம் இருந்தாலும், சாத்தான் ஒரு சிருஷ்டியே, கட்டுப்பாட்டில் இருக்கிறான். அவன் கவர்ச்சியான காரியங்களை முன்வைக்கலாம், கற்பனையைத் தூண்டலாம், நம்மில் உள்ள மீதியுள்ள பாவத்தை கிளர்ச்சியுறப்பண்ணலாம் — ஆனால் அவன் சித்தத்தைப் பலவந்தப்படுத்த முடியாது, தேவன் நியமித்த எல்லையைத் தாண்டி ஒரு அங்குலமும் நகர முடியாது (யோபு 1:12).

இங்கே ரோமர் 8:28 இன் ஆறுதல் விசேஷமான ஒளியுடன் பிரகாசிக்கிறது. சோதனை, தேவனுடைய கட்டளைக்கு வெளியே போகவில்லை. தாக்குதலை அனுமதிக்கிற அதே கர்த்தர் அதன் முடிவையும் ஆளுகிறார். கொடிய காற்றால் அசைக்கப்படும் மரம்போல், விசுவாசி மேலும் ஆழமாக வேரூன்றுகிறான். சாத்தான் அழிவுக்கென்று நினைப்பதை, தேவன் சுத்திகரிப்புக்கென்று நினைக்கிறார்.

முதலாவது, சோதனையானது, ஆத்துமாவை ஜெபத்திற்கு நேராக அழைத்து செல்கிறது. எதிரி, கடுமையாக அழுத்தும்போது, பரிசுத்தவான் கிருபையின் சிங்காசனத்தை நோக்கி வேகமாக ஓடுகிறான். "அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்." என்று பவுல் கூறுகிறார் (2 கொரிந்தியர் 12:8). சோதனை நமது பலவீனத்தை வெளிப்படுத்தி, சுயநம்பிக்கையை நீக்கி, "எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,” என்று கூப்பிடப் பழகச் செய்கிறது (மத்தேயு 6:13). ஜெபத்திற்கு அனுப்புகிறது எதுவோ, அது இறுதியில் நமக்கு தீங்கு செய்யாது.

இரண்டாவது, சோதனை, பாவத்திற்கு எதிரான எதிர்ப்பைப் பலப்படுத்துகிறது. பிசாசு எவ்வளவு கொடூரமாகத் தூண்டுகிறானோ, அவ்வளவு தெளிவாக விசுவாசி தனக்கு முன் வைக்கப்படும் பொல்லாப்பை வெறுக்கக் கற்றுக்கொள்கிறான். யோசேப்பின் பாவத்திற்குண்டான மறுப்பு, சோதனையின் தொடர்ச்சியால் மென்மையடையாமல், கூர்மையடைந்தது (ஆதியாகமம் 39:9). தேவன் சாத்தானின் உந்துதலை ஒரு கடிவாளமாக மாற்றி, ஆத்துமாவை அது செய்யத் தூண்டப்படும் பாவங்களிலிருந்து பின்வாங்கச் செய்கிறார்.

மூன்றாவது, சோதனையானது, பெருமை கொண்ட இருதயத்தை தாழ்த்துகிறது. பவுலுக்கு “மாம்சத்தில் ஒரு முள், சாத்தானுடைய தூதன்” கொடுக்கப்பட்டது, அவன் தன்னை மேன்மைப்படுத்தாமல் இருக்கும்படியே (2 கொரிந்தியர் 12:7). வெற்றியில், பெருமை கொள்வதைவிட, சோதனையால் தாழ்த்தப்படுவது மிகவும் நல்லது. தேவன், ஒரு பரிசுத்தவான் தன் சுயபலத்தில் நம்பிக்கைகொள்ளும்படி தேவன் விடுவதற்குப் பதிலாக, தன் பலவீனத்தை உணரும்படி அவனை விரைவில் நடத்துவார்.

நான்காவது, சோதனை கிருபையைச் சோதித்து நிரூபிக்கிறது. பிசாசு அழிக்கும்பொருட்டு சோதிக்கிறான், ஆனால் தேவன் உண்மையை வெளிப்படுத்தும்பொருட்டு சோதனையை அனுமதிக்கிறார். விசுவாசம் யுத்தமில்லாத நிலையில் அல்ல, உறுதியான எதிர்ப்பில் வெளிப்படுகிறது. மோதல் எவ்வளவு கடுமையோ, தைரியம் அவ்வளவு பிரகாசமாகப் பிரகாசிக்கிறது (யாக்கோபு 1:12).

ஐந்தாவது, சோதனை, விசுவாசிகளை மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கத் தகுதியுள்ளவர்களாக்குகிறது. எதிரியுடன் போராடியவர்களே, சக மோட்சப்பிராயாணிகளுக்கு எச்சரிக்கவும், வழிநடத்தவும், ஊக்கப்படுத்தவும் மிகவும் பொருத்தமானவர்கள். "அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே."(2 கொரிந்தியர் 2:11). யுத்தத்தின் தழும்புகள் இரக்கத்தின் கருவிகளாக மாறுகின்றன.

ஆறாவது, சோதனை இயேசுவின் மென்மையான இரக்கத்தை வரவழைக்கிறது. "ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்." (எபிரெயர் 2:18). ஆத்துமா காயப்பட்டிருக்கும்போது கிறிஸ்து பரிந்து பேசுகிறார்; யுத்தம் கொந்தளிக்கும்போது கிருபை அளிக்கப்படுகிறது.

ஏழாவது, சோதனை இந்த உலகத்தோடு நமது பற்றுதலைத் தளர்த்தி, பரலோகத்தை நோக்கி ஏங்கச் செய்கிறது. இங்கே பூமியில் போர் ஒருபோதும் முடிவதில்லை; அங்கே எதிரி என்றென்றும் மௌனமாக்கப்படுகிறான். களைத்த போர்வீரன் கிரீடத்தை எதிர்பார்க்கிறான் (2 தீமோத்தேயு 4:7-8).

விசுவாசி தற்காலிகமாக வெல்லப்பட்டாலும், அது அவனுடைய ஆத்தும நன்மைக்கே வேலை செய்கிறது. பேதுருவின் விழுதல் அவனுடைய அகந்தையை நொறுக்கி, ஆழமான தாழ்மையையும், அதிக விழிப்பையும், இயேசுவின்மீது உண்மையான சார்பையும் உண்டாக்கியது (லூக்கா 22:62; யோவான் 21:15-17).

இவ்வாறே பழைய சர்ப்பமாகிய பிசாசு தேவனுடைய அளவற்ற ஞானத்தினால் எப்போதும் தோற்கடிக்கப்படுகிறான். சோதனையே பரிசுத்தவான்களை மகிமையை நோக்கிச் சுமந்து செல்கிற எதிர்க்காற்றாயிருக்கிறது. எதிரி கொந்தளிக்கிறான், ஆனால் இயேசு கிறிஸ்து ஆளுகை செய்கிறார். யுத்தத்தை அனுமதிக்கிற தேவனே வெற்றியையும் உறுதிப்படுத்துகிறார். "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." (1 கொரிந்தியர் 15:57)

Comments

Popular posts from this blog

கனி தரும் கிறிஸ்தவத்தின் நான்கு அடையாளங்கள் - ஜே. சி. ரைல். Four Marks of Fruit-Bearing Christianity - J.C. Ryle. ( 1816 - 1900)

Why Puritan Thomas Watson Took Sin Seriously and So Should We - By Scott ராபர்ட்ஸ். தாமஸ் வாட்சன் ஏன் பாவத்தை தீவிரமாகக் கருதினார்? நாமும் ஏன் அவ்வாறே கருத வேண்டும்? - ஸ்காட் ராபர்ட்ஸ்.

ஆண்டவரே, இந்த பாவத்தை அடித்து நொறுக்கும் - தொமஸ் வாட்சன். O Lord, Smite this sin. - Thomas Watson. (1620-1686).