கனி தரும் கிறிஸ்தவத்தின் நான்கு அடையாளங்கள் - ஜே. சி. ரைல். Four Marks of Fruit-Bearing Christianity - J.C. Ryle. ( 1816 - 1900)
கனி தரும் கிறிஸ்தவத்தின் நான்கு அடையாளங்கள் - ஜே. சி. ரைல். Four Marks of Fruit-Bearing Christianity - J.C. Ryle. ( 1816 - 1900)
"கனி தருகிற கிறிஸ்தவம்" என்று நான் அழைக்கிற காரியம், மனுகுலத்தின் மேல் அது உண்டாக்குகிற ஆசீர்வாதமான விளைவுகளினால் தனது தெய்வீக சுபாவாத்தை வெளிப்படுத்துகிறது. அவிசுவாசிகள் எவ்விதத்திலும் மறுதலிக்க முடியாத அத்தகைய கிறிஸ்தவம் முற்றிலும் ஒரு வித்தியாசமான காரியமாகும். அதன் முக்கியமான அடையாளங்களையும் தன்மைகளையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்:
(1) கனி தருகிற கிறிஸ்தவமானது, பரிசுத்த வேதவாக்கியங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டவை (Inspiration) என்பதையும், அவை போதுமானவை (Sufficiency) மற்றும் உன்னதமானவை (Supremacy) என்பதையும் எப்போதும் போதித்து வந்திருக்கிறது. பக்திக்குறிய விஷயங்களில் நம்பிக்கைக்கும், நடைமுறைக்கும் ஒரே நம்பத்தக்க விதி என்பது எழுதப்பட்ட தேவவசனமே என மக்களுக்கு அது கூறியிருக்கிறது; இந்த வேதத்தில் இல்லாத ஒன்றை எதையும் தேவன் நம்பும்படி கேட்பதில்லை, அதற்கு முரணான எதுவும் சரியானதல்ல என்றும் அது உறுதிப்படுத்தியிருக்கிறது. மனுஷனுடைய அறிவு, மனுஷனுடைய சிந்தை, அல்லது சபையின் குரல் ஆகியவை வேதத்திற்கு மேலாக அல்லது அதற்கு சமமாக வைக்கப்படுவதை அது ஒருபோதும் அனுமதித்ததில்லை. நாம் அதை எவ்வளவு குறைவாக புரிந்திருப்பினும், அந்தப் பழைய புத்தகம் (Old Book) வாழ்க்கைக்கும் உபதேசத்திற்கும் ஒரே அளவுகோலாக (only standard) இருக்க வேண்டும்
(2) கனி தருகிற கிறிஸ்தவமானது, மனித சுபாவத்தின் பாவம், குற்ற உணர்வு மற்றும் சீர்கேட்டைப் பற்றி எப்போதும் முழுமையாகப் போதித்து வந்திருக்கிறது. மனுஷர்கள் பாவத்தில் பிறக்கிறார்கள் என்றும், அவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்கும் தண்டனைத் தீர்ப்புக்கும் பாத்திரவான்களாய் இருக்கிறார்கள் என்றும், இயல்பாகவே தீமையைச் செய்ய முற்படுகிறவர்களாய் இருக்கிறார்கள் என்றும் அது அறிவிக்கிறது.
மனுஷர் தாங்கள் விரும்பினபோது நல்லவர்களாகி, தங்களைத்தாங்களே தேவனோடு ஒப்புரவாக்கிக்கொள்ளக் கூடிய பலவீனமான அல்லது பரிதாபத்திற்குரிய சிருஷ்டிகள் மாத்திரமே என்பதை அது ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அதற்கு மாறாக, ஒரு மனிதன் தன் பாவத்தினால் எதிர்நோக்கியுள்ள அழிவையும் அதின் அருவருப்பையும் (Danger and Vileness), அவன் பாவங்களுக்குரிய தெய்வீக மன்னிப்பும் பரிகாரமும், மறுபடியும் பிறத்தலும் அல்லது மனந்திரும்புதலும், இருதயத்தின் முழுமையான மாற்றமும் அவனுக்கு எவ்வளவு அவசியமானது என்பதையும் அது இடைவிடாமல் பிரகடனப்படுத்தி வருகிறது.
(3) கனி தருகிற கிறிஸ்தவமானது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆவிக்குரிய வாழ்வின் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் உரிய முக்கிய நோக்கமாகவும், அவர் தேவனுக்கும் மனுஷருக்கும் இடையே ஒரே மத்தியஸ்தராகவும்,மனசாட்சியின் சமாதானத்திற்கு ஒரே ஆதாரமாகவும், ஆவிக்குரிய வாழ்வின் வேராகவும் எப்போதும் ஜனங்களுக்கு முன்பாக நிறுத்துகிறது.
அவர் வெறும் தீர்க்கதரிசி என்றும், நமக்கு ஒரு மாதிரி (Example) என்றும், நியாயாதிபதி என்றும் மாத்திரம் போதிப்பதோடு அது ஒருபோதும் திருப்தியடைவதில்லை. கிறிஸ்துவைக் குறித்து அது வலியுறுத்தும் பிரதான காரியங்களாவன:
அவர் தமது மரணத்தினால் செய்த பாவநிவாரணம்.
சிலுவையில் அவர் செய்த தியாகம்
அவருடைய இரத்தத்தால் குற்றத்திலிருந்தும் ஆக்கினையிலிருந்தும் முழுமையான மீட்பு.
அவர் உயிர்த்தெழுந்ததின் மூலம் மரணத்தின் மேல் கொண்ட வெற்றி.
தேவனுடைய வலதுபாரிசத்தில் நமக்காக அவர் செய்கிற பரிந்துபேசுதல்.
அவர் மேல் வைக்கப்படும் எளிமையான விசுவாசத்தின் அத்தியாவசியத் தேவை.
சுருக்கமாகச் சொன்னால், கிறிஸ்தவ இறையியலில் கிறிஸ்துவையே அது அல்பாவும் ஓமெகாவுமாக (துவக்கமும் முடிவுமாக) மாற்றியுள்ளது.
(4) கனி தருகிற கிறிஸ்தவமானது, திரியேக தேவனில் ஒருவராகிய பரிசுத்த ஆவியானவரை எப்போதும் கனப்படுத்தி, அவருடைய கிரியைகளை மகிமைப்படுத்துகிறது. ஒருவர் ஞானஸ்நானம் பெற்றதாலோ, சபையின் அங்கத்தினரானதினாலோ அல்லது திருவிருந்தில் பங்கெடுப்பதாலோ மட்டுமே - தானாகவே - ஆவியானவரின் கிருபை அவர்களின் இருதயத்தில் பெற்றிருக்கிறார்கள் என்று அது ஒருபோதும் போதிப்பதில்லை.
மாறாக, ஆவியின் கனிகளே ஒருவருக்குள் ஆவியானவர் இருப்பதற்கான ஒரே அத்தாட்சி என்பதில் அது உறுதியாய் நிற்கிறது. அந்த கனிகள் வாழ்க்கையில் காணப்பட வேண்டும்
நாம் ஆவியினால் மறுபடியும் பிறந்திருக்க வேண்டும்.
ஆவியினால் நடத்தப்பட வேண்டும்.
ஆவியினால் பரிசுத்தமாக்கப்பட வேண்டும்.
ஆவியானவரின் செயல்பாடுகளை உணர வேண்டும்.
தேவனுடைய கற்பனைகளின் வழியில் அவரோடு நெருங்கி நடப்பதும், பரிசுத்தம், அன்பு, சுய வெறுப்பு, தூய்மை மற்றும் நன்மை செய்வதில் காட்டும் வைராக்கியமுமே ஒருவருக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதற்குரிய திருப்திகரமான அடையாளங்கள் என்று அது போதிக்கிறது.
சுருக்கம் : மெய்யாகவே கனி தருகிற கிறிஸ்தவம் என்பது இதுவே. கடந்த பத்தொன்பது நூற்றாண்டுகளில் இத்தகைய கிறிஸ்தவம், உலகில் இன்னும் அதிகமாய் இருந்திருக்குமானால், அது உலகிற்கு எவ்வளவோ நலமாய் இருந்திருக்கும்! பெரும்பாலும், கிறிஸ்தவ உலகத்தின் அநேக பகுதிகளில் இது மிகக் குறைவாகவே இருந்ததினால், கிறிஸ்துவின் மார்க்கமே அழிந்துபோனது போலவும், முற்றிலும் இகழ்ச்சிக்குரியதாகவும் காணப்பட்டது.
ஆனால், நான் விவரித்த இத்தகைய கிறிஸ்தவம் எங்கெல்லாம் பரவியிருந்ததோ, அங்கெல்லாம் உலகம் ஆசீர்வாதத்தைப் பெற்றது; அவிசுவாசிகளின் வாய் அடைக்கப்பட்டது; தெய்வீக வெளிப்பாட்டின் சத்தியம் அங்கீகரிக்கப்பட்டது. ஏனெனில், "மரமானது அதின் கனியினால் அறியப்படும்."
To Contact:
Pastor. Thomas Edison,
Grace Reformed Baptist Church,
5/55, Thindu, Semmedu Post,
Kolli Hills, Tk,
Namakkal District.
PIN : 637411
Ph.no : 04286 247595
9442800595
E-Mail: gracerbcmail@gmail.com
.jpeg)
Comments
Post a Comment