நாம் தேவன் மீது அன்பு செலுத்துகிறோமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? - தாமஸ் வாட்சன். How May We Know Whether We Love God? - Puritan Thomas Watson (1620-1686)
1.தேவனை நேசிப்பவன், அவரது பிரசன்னத்தை விரும்புவான்.
பொதுவாக அன்பில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பிரிந்து இருக்க முடியாது; தம் அன்புக்குரியவர்களை காண முடியாதபோது அவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். தேவனை ஆழமாக நேசிக்கும் ஒரு ஆத்துமா, அவரை அவருடைய — வார்த்தை, ஜெபம், ஓய்வு நாள் ஆராதனை, திருநியமனங்கள் அனைத்தும் — அனுபவிக்க விரும்புகிறது. தாவீது தேவனை காணாதபோது மயங்கப்போகிறேன் என்று சொல்லுகிறார்: "என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது"(சங்கீதம் 84:2). தேவனுடைய நியமங்களில் அக்கறை இல்லாதவர்கள், “ ஓய்வு நாள் எப்போது கடந்து போகும்?” என்று நினைப்பவர்கள். இது, தாங்கள் தேவனை நேசிப்பதில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள்.
2. தேவனை நேசிப்பவன் பாவத்தை நேசிப்பதில்லை.
"கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்"(சங். 97:10). தேவன்பற்றிய அன்பும், பாவப்பற்றிய அன்பும், இரும்பும் களிமண்ணும் ஒன்றாக கலக்காதது போல் ஒன்றாக இருக்க முடியாது. நாம் நேசிக்கும் ஒவ்வொரு பாவமும் தேவனுடைய பரிசுத்த தன்மையையே தாக்குகிறது; ஆனால் தேவனை நேசிப்பவன் பாவத்தை மனசார வெறுக்கிறான்.
இரு அன்புடையவர்களைப் பிரிக்க நினைப்பவன் எவ்வளவு கேவலமானவனோ, அதைப் போலத்தான் பாவமும். தேவனும் விசுவாசியும் இரு அன்புடையவர்கள்; பாவம் அவர்களுக்குள் இடைவெளியை உண்டாக்குகிறது. அதனால்தான் அவ்வாத்துமா பாவத்திற்கு முற்றிலும் எதிராக நிற்கிறது.
இதினாலே உங்கள் தேவன்பற்றிய அன்பைச் சோதித்துக் கொள்ளுங்கள்.
பெலிஸ்தியர் — சிம்சோனின் மரண விரோதிகள் — அவர்களுடன் ரகசியமாக அணுகிப் பழகிக்கொண்டு, தெலீலாள் “நான் சிம்சோனை நேசிக்கிறேன்” என்று எப்படி சொல்ல முடியும்?
3. தேவனை நேசிப்பவன் வேறு எதையும் அதிகமாக நேசிக்க மாட்டான். உலக காரியங்கள் மீது அவனது அன்பு மிகவும் குளிர்ந்ததாக இருக்கும். தேவனை பற்றிய அவனது அன்பு, வானில் சூரியன் பாயும் வேகத்தில் நகர்கிறது; ஆனால் உலகத்துக்கான அவன் அன்பு, மந்த வேகத்தில் உள்ளது. உலக அன்பு, தெய்வ பக்தியை அழித்து விடுகிறது. மண் நெருப்பை அணைப்பது போல, அது, தேவன் மீதுள்ள பற்றை அணைத்து போடுகிறது. பவுலுக்கு உலகம் ஒரு இறந்த பொருளாகக் கருதப்பட்டது. "… அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்." (கலாத்தியர் 6:14). பவுலிடத்தில், உலகத்திற்கு மரித்த தன்மையையும், அதை, அனுதினமும் அடித்து நொறுக்கும் தன்மையும், இரண்டையும் காணலாம். தேவனை நேசிப்பவன் உலகத்தைப் பயன்படுத்தினாலும், அவன், தேவனையே தேர்வு செய்கிறான். உலகம் அவனை ஈடுபடுத்துகிறது, ஆனால் தேவன்தான் அவனை மகிழ்விக்கிறார் மற்றும் திருப்திப்படுத்துகிறார். தாவீது சொன்னது போல், "… எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவன்.."(சங் 43:4) என்று கூறுகிறான்.
4. தேவனை நேசிப்பவன் அவரில்லாமல் வாழ முடியாது.
நாம் எதை நேசிக்கிறோமோ அது இல்லாமல் நாம் வாழ முடியாது. மனிதன் இசையில்லாமலும், மலர்களில்லாமலும் வாழ முடியும்; ஆனால் உணவில்லாமல் முடியாது. அதுபோல், தேவனை ஆழமாக நேசிக்கும் ஆத்துமா, அவரில்லாமல் தன்னை முழுமையாகக் நம்பிக்கையற்றவனாகவே கருதுகிறான். "நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்." (சங் 143:7). "வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; …" (யோபு 30:28) எனக்கு நட்சத்திர வெளிச்சம் உள்ளது, ஆனால் நான் விரும்புவது நீதியின் சூரியனான தேவனின் இனிமையான உறவை அனுபவிப்பதே. தேவன் நம்முடைய முதன்மையான நன்மையாக இருக்க, நாம் அவரின்றி வாழ முடியுமா? அவரில்லாமலேயே நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள், தாங்கள் தேவனை நேசிப்பதில்லை என்பதை எவ்வளவு தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள்! அவர்களுக்கு தானியமும் மற்றும் எண்ணெய் (பொருள், செல்வம்) இருந்தால் போதும், தேவன் அவர்களிடத்தில் இல்லாததை பற்றி அவர்கள் ஒருபோதும் முறையிடுவதை நீங்கள் கேட்கமாட்டீர்கள்.
5. தேவனை நேசிப்பவன் அவரை அடைவதற்காக எத்தகைய பாடுகளையும் சகித்துக்கொள்வான்.
பெரிய லாபம் கிடைக்க வர்த்தகர்கள் எவ்வளவு உழைப்பதும், எத்தனை ஆபத்துகளையும் எதிர்கொள்ளுவதையும் நினைத்துப்பாருங்கள்! யாக்கோபு ராகேலை நேசித்ததால், அவளைப் பெறுவதற்காக பகலில் வெயிலையும், இரவில் பனியையும் எல்லாம் தாங்கினான்.
அப்படியே, தேவனை நேசிக்கும் ஆத்துமா, அவரை அனுபவிக்க எந்த உழைப்பையும் தவிர்க்காது.
“என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிககொண்டிருக்கிறது. " (சங்கீதம் 63:8). என்று கூறுவான்.
அன்பு என்பது ஆத்துமாவின் உந்து சக்தி என்று அகஸ்டின் கூறுகிறார்.
இது கடிகாரத்தின் சக்கரத்தை இயக்கும் உந்து சக்தி போல, ஆத்துமாவை இயக்குகிறது.
இத்தகைய அன்பு, ஜெபத்திலும், அழுகையிலும், உபவாசத்திலும் தன்னை அதிகமாக வெளிப்படுத்துகிறது. தேவனையே நேசிக்கும் அந்த ஆத்துமா, அவரைப் பெறுவதற்காக வியாக்குலத்தோடு போராடுகிறது.
புளூட்டார்க் என்கிற தத்துவ ஞானி குறிப்பிடுகிறார், பிரான்சின் பண்டைய மக்களானவர்கள், இத்தாலியின் இனிய திராட்சரசத்தை ஒருமுறை ருசித்த பிறகு, அந்த நாட்டை எட்டும்வரை ஓய்வெடுக்கமாட்டார்களாம்.
6. தேவனை நேசிப்பவன், அவரில் ஒரு பங்கு கிடைக்கும் வரை ஓய்வெடுப்பதில்லை. "என் ஆத்தும நேசரைத் தேடுவேன்."( I will seek him whom my soul loveth"(உன்னதப்பாட்டு 3:2) தேவனை நேசிப்பதாகச் சொல்லுகிறவர்கள், அவரைப் பெறுவதற்கான வழிமுறைகளில் உழைப்பு செலுத்தாமல் இருப்பவர்கள் எப்படி அவரை உண்மையாக நேசிக்க முடியும்? "சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து..."(நீதி 19:24). அவன் உழைப்பில் அல்ல, சோம்பலில் இருக்கிறான்.
கிறிஸ்துவும் இரட்சிப்பும் பழுத்த அத்திப்பழம்போல அவன் வாயிலே தானாக விழுந்தால் மட்டுமே அவன் திருப்தி அடைவான்; ஆனால் அதற்காக அதிகக் கஷ்டப்பட அவன் விரும்புவதில்லை.
தன் நண்பனைப் பார்க்க ஒரு பயணத்தை மேற்கொள்ளவே மனமில்லாதவன், அந்த நண்பனிடம் உண்மையான அன்பு கொண்டிருக்கிறான் என்று சொல்ல முடியுமா?
7. தேவன் மீது அன்பு கொண்டவன், அவரை செல்வம் மற்றும் உயிரைவிடவும் மேலாக விரும்புகிறான்.
(1) செல்வத்தைவிட — "என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." (பிலிப்பியர் 3:8) என்கிறார் பவுல். விலையேறப்பெற்ற ஒரு இரத்தினத்தை நேசிப்பவன் அதற்காக ஒரு பூவை விட்டுக்கொடுக்கத் தயங்குவானா? விகோவின் மார்க்விஸ் கலியாசியஸ் (Galeacius, Marquis of Vico) என்ற பெரிய செல்வந்தன், ரோம கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து, சீர்திருத்த விசுவாசத்திற்கு திரும்பினவன். தேவனுடைய திருநியமனங்களில் அவரோடு ஆழமாய் ஐக்கியப்படுவதற்காக, தன் பெரும் செல்வத்தைத் துறந்தான். ஒரு கத்தோலிக்க மத துறவி அவனை இத்தாலியில் ரோம கத்தோலிக்க மதத்திற்குத் திரும்பும்படி இழுப்பூட்டி, அதற்குப் பெரும் பொற்காசு தருவதாக வாக்களித்தான். அதற்கு அவன் பதிலளித்தது: “இயேசு கிறிஸ்துவோடும் அவருடைய பரிசுத்த ஆவியோடும் ஒரே ஒரு நாள் ஐக்கியம் கொண்ட வாழ்வு, உலகிலுள்ள அனைத்து தங்கத்தோடும் ஒப்பிட முடியாது, அப்படியாக அத்தங்கத்தை மதிக்கிறவர்கள் தங்கள் பணத்தோடு சேர்ந்து அழிந்து போகட்டும்” என்றான்.
(2) உயிரைவிட —"மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், …" (வெளி 12:11). தேவன் மீது கொண்ட அன்பு, ஆத்துமாவை உயிரின் மீதுள்ள பற்றைவிடவும் மரண பயத்தைவிடவும் உயரே கொண்டு செல்கிறது.
8. தேவன் மீது அன்பு கொண்டவன், அவருக்கு பிரியமானவர்களாகிய பரிசுத்தவான்களையும் நேசிக்கிறான் (1 யோவான் 5:1). அப்படியாக, அவருடைய பிள்ளைகளிடத்தில், தேவனுடைய கிருபையைக் கண்டு, அவனில் எத்தனை அதிகமாகக் கடவுளைப் பார்க்கிறோமோ, அத்தனை அதிகமாக அவனிடம் அன்பு செலுத்துவது — இதுவே தேவன் மீது உண்மையான அன்பு இருப்பதற்கு உண்டான அடையாளம்.
துன்மார்க்கர்கள் தேவனை நேசிப்பதாக வாய்க்கு வாய் சொல்லிக்கொண்டாலும், அவருடைய சாயலாகிய தேவபிள்ளைகளை வெறுத்து, துன்புறுத்துகிறார்கள். அரசனுடைய சிலையை இழிவுபடுத்துகிறவனும், அவன் உருவப்படத்தைக் கிழிப்பவனும் அந்த அரசனிடம் அன்பு கொண்டிருக்கிறான் என்று சொல்ல முடியுமா?
இறந்துபோன பரிசுத்தவான்களுக்கு இவர்கள் மிகுந்த பக்தி காட்டுவது போலத் தோன்றலாம். புனித பவுல், புனித ஸ்தேவான், புனித லூக்கா முதலியோருக்கு இவர்கள் பெரும் மரியாதை செலுத்துகிறார்கள்; இறந்த பரிசுத்தவான்களைப் புனிதர்களாக ஏற்றுக்கொண்டு கொண்டாடுகிறார்கள். ஆனால் உயிரோடிருக்கும் தேவப்பிள்ளைகளை நேசிப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் தேவனிடம் அன்பு கொண்டிருக்கிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?
9. தேவன் மீது அன்பு கொண்டிருந்தால், அவரை இழிவுபடுத்திவிடுவோமோ என்ற பயம் நம்மை விட்டு நீங்காது. பிள்ளை தன் தகப்பனிடம் எவ்வளவு அதிகமாக அன்பு செலுத்துகிறானோ, அவ்வளவு அதிகமாக அவரைக் கோபப்படுத்திவிடுவோமோ என்று அஞ்சுகிறானோ, அது போலவே நாமும் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோமே என்று துக்கப்பட்டு அழுவோம்.
“பேதுரு வெளியே போய் மனங்கசந்து அழுதான்” (மத்தேயு 26:75).
கிறிஸ்து பேதுருவின்மீது எத்தனை ஆழமான அன்பு வைத்திருந்தார் என்பதைப் பேதுரு நன்றாக அறிந்திருந்தான். ஏனெனில், அவருடைய மருரூப மலைக்கு அழைத்துச் சென்று, பரலோக மகிமையைத் தரிசனமாகக் காண்பித்தார். இத்தனை பெரிய அன்பின் அடையாளங்களைப் பெற்ற பிறகும் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டோமே என்ற எண்ணம் பேதுருவின் இருதயத்தை உடைத்தது. அதனால்தான் “மனங்கசந்து அழுதான்”.
நாமும், தேவனுக்கு விரோதமாக செய்த பாவங்களை குறித்து, மனங்கசந்து கண்ணீர் விடுகிறோமா? இதுவே தேவன் மீது நமக்கு அன்பு இருப்பதற்கு ஆசீர்வாதமான அடையாளம். இப்படி அன்பு செலுத்துகிறவர்களுக்கே இரக்கம் கிடைக்கும். "என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்."(யாத் 20:6).
நாம் தேவன் மீது அன்பு கொண்டவர்களாக இருப்போமாக.
நமக்கு உணவைத் தருகிறவரை நாம் நேசிக்காமல், உணவை மட்டும் நேசிக்கிறோமா? பரலோகத்தில் நாம் எதிர்பார்க்கும் எல்லா மகிழ்ச்சியும் தேவனில் இருக்கிறது; அப்படியானால், அங்கே நமக்கு மகிழ்ச்சியாக இருப்பவர் இன்று நமக்கு அன்புக்கு உரியவராக இல்லாமல் போகலாமா?
அகஸ்டின் இவ்விதமாக கூறுகிறார்,
தேவனே, உம்மீது அன்பு செலுத்தாமலிருப்பது போதுமான தண்டனையல்லவா?
மற்றொரு இடத்தில் அவர் கூறுகிறார்:
"என் ஆத்துமா தேவன் மீது அன்பு செலுத்துவதைக் காணாவிட்டால், என் சொந்த ஆத்துமாவையே நான் வெறுத்துவிடுவேன்"
To Contact:
Pastor. Thomas Edison,
Grace Reformed Baptist Church,
5/55, Thindu, Semmedu Post,
Kolli Hills, Tk,
Namakkal District.
PIN : 637411
Ph.no : 04286 247595
9442800595
E-Mail: gracerbcmail@gmail.com
.jpeg)
Comments
Post a Comment