இரை மற்றும் கொக்கி - தொமஸ் ப்ரூக்ஸ் ( 1652) The Bait and the Hook - Puritan. Thomas Brooks (1652).
The Bait and the Hook - Puritan. Thomas Brooks (1652)
இரை மற்றும் கொக்கி - தொமஸ் ப்ரூக்ஸ் ( 1652)
சாத்தான் ஒரு மீனவன்
அவன் ஒருபோதும் தூண்டில் உள்ள கொக்கியை வெளிப்படுத்துவதில்லை;
அவன் காட்டுவது இரை மட்டுமே — பாவம் வாக்குறுதி செய்யும் இன்பம், இனிமை, லாபம் மட்டுமே.
நீ பெறப்போகிறதை நோக்கி உன் கண்கள் நிலைத்திருக்கும்போது,
நிச்சயமாக நீ இழப்பதைக் மறைக்கிறான்:
அதாவது, தேவனுடைய கிருபை, உன் சமாதானம், உன் ஆனந்தம்,
சிலவேளைகளில் நீ எண்ணுவதற்கு மேலாக பலவற்றை இழக்கிறாய்.
இது அவன் முதலாவது யுக்தியே.
தோட்டத்திலே அவன் ஏவாளிடத்தில்,
“உங்கள் கண்கள் திறக்கப்படும்; நீங்கள் தேவனைப்போல இருப்பீர்கள்” என்றான்.
இதோ அவன் காட்டின இரை — அறிவு, அதிகாரம், தேவனைப்போன்ற நிலை.
ஆனால் கொக்கி என்ன?
அவமானம், வெளியேற்றம், மரணம் — முழு மனு குலத்தையும் பாதித்தது
தடைசெய்யப்பட்ட கனியின் ஒரு பகுதிக்காக பரலோகத்தையே மாற்றிக்கொண்டார்கள்.
இன்றும் அதே பரிமாற்றத்தை மனிதர்களோடு அவன் செய்கிறான்.
இயேசுவிடத்திலும் அவன் இதையே முயன்றான். உலக இராஜ்யங்களையெல்லாம் அவன் முன்வைத்து, அவற்றின் மகிமையையும் அழகையும் காட்டினான்.
இவை உலக மனுஷனின் மனதை மயக்கிஇருக்கலாம் ஆனால் உலகத்தை மயக்கும் இவை, அவரை அசைக்கவில்லை.
இரைக்கு எதிரான நான்கு நிவாரணங்கள்
1. பாவத்திலிருந்து தூரமாயிருங்கள்.
"தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்."(ரோமர் 12:9)
இங்கே பவுல் பயன்படுத்தும் வார்த்தை
சாதாரண வெறுப்பல்ல; நரகத்தைப் போல வெறுத்து விலகுதல். யோசேப்பு போத்திபாரின் மனைவியிடமிருந்து தூரமாய் இருந்தான்; நிலைத்திருந்தான். தாவீது தங்கக்கூடாத இடத்தில் தங்கினான்; தொடக்கூடாததைத் தொட்டான்; கடுமையாய் விழுந்தான். எலும்புகள் முறிந்தது, மனசாட்சி காயம்பட்டது, தேவனுடைய பிரசன்னத்தின் இனிமையை இழந்தான். ஆதலால், எளிய வழியே பாதுகாப்பானது:
தூரமாய் இருங்கள்; இரையோடு விளையாடாதிருங்கள்.
2. பாவம் கசப்பு கலந்த இனிப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாயில் இனிப்பாயிருந்தது, வயிற்றில் விஷமாயிற்று. ஆதாமின் கனியும் அப்படியே.
இஸ்ரவேலர் உண்ட காடை இறையும் அப்படியே. ஏசாவின் கூழும் அப்படியே.
உணவு இனித்தது — பின்னர் அதினுடைய விளைவு வந்தது. பாம்பு கடிக்கும் முன் தழுவும்; விஷம் மெதுவாய் உடம்பில் ஏறும். வலி வரும்போது, இன்பத்தை விட பெரிதாய் இருக்கும்.
3. பாவத்தின் விலையை எண்ணிப் பார்.
பாவம் வெறும் வருத்தத்தையே சேர்க்கவில்லை; அது ஆசீர்வாதத்தைப் பறித்துக்கொள்கிறது. தேவனுடைய தயவு, அது ஜீவனிலும் உயர்ந்தது. இந்த உலகத்தில் எதுவும் உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு, அளவிடப்பட முடியாத சந்தோஷம், புரிந்துகொள்ள முடியாத அந்த சமாதானம். பரிசுத்த ஆவியானவர் ஆத்துமாவைத் தெளிவித்து மகிழ்விக்கும் அந்த அமைதியான நேரங்கள். இப்படியாக, தேவனுடைய தயவை எவற்றோடும் ஒப்பிட முடியாது. பாவம் உனக்கு ஏதோ கொடுக்கப் போவதாக வாக்களிக்கிறது. ஆனால் ஒருபக்கம் அது பரித்துச் செல்வதை நீ கவனித்துப் பார்.
4. பாவம் ஒரு மகா வஞ்சகனென்று அறிந்து கொள்.
பாவம் உன் ஆத்துமாவை முத்தமிட்டு, பின்பு அதை என்றென்றைக்கும் காட்டிக்கொடுக்கும். தெலிலாளைப்போல, அது உன்னிடம் புன்னகை புரிந்து; பின்பு உன்னைப் பகைவனின் கையில் ஒப்புக்கொடுத்து விடும்.
இதுவே, அதை மிகவும் பயங்கரமாக்குகிறது: பாவம் மயக்குகிறது. பாவத்தின் மந்திரத்தில் ஆழ்ந்த ஆத்துமா, தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் கூறுகிறது. அது பட்டயத்தின் முனையிலும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறது.
மருத்துவர்கள், தியோதீமஸை நோக்கி, “நீ உன் குடிப்பழக்கத்தை விட்டுவிடாவிட்டால், உன் கண்கள் பார்வையிழந்துபோகும்” என்று சொன்னார்கள். அவன் பதில் என்ன? “அப்படியானால், இனிமேல், இனிய ஒளியே! விடைபெறுகிறேன்” என்றான். தன் பாவத்தை விட்டுவிடுவதைவிட, தன் கண்களை இழப்பதையே அவன் தெரிந்துகொண்டான்.
பாவத்தால் மயக்கப்பட்ட மனிதன், தன்னை அழித்துக்கொண்டிருக்கும் அந்தப் பாவத்தை விட்டுவிடுவதைவிட, தேவனையும், கிறிஸ்துவையும், பரலோகத்தையும், தன் சொந்த ஆத்துமாவையும் இழப்பதையே விரும்புகிறான்
ஆகையால், நீ உன்னைக் காத்துக்கொள். சாத்தானின் தூண்டிலில் உள்ள பொன் கொக்கியை சிறிதளவும் ருசி பார்க்காதே.

Comments
Post a Comment