தேவனையே வாஞ்சித்தல் - தொமஸ் வாட்சன். Puritan Thomas Watson (1620-1686)

 



"பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை." (சங்கீதம் 73:25)


கிருபையின் ராஜ்யம் நம்முடைய இருதயங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்பதை, தேவனை நோக்கிய உண்மையான வாஞ்சைகள் இருப்பதினால் அறிந்துகொள்ளலாம். இந்த நாடியின் துடிப்பினாலே ஜீவன் உண்டு என்று நிச்சயித்துக் கொள்கிறோம்.

தேவனை நோக்கிய உண்மையான வாஞ்சை மனப்பூர்வமானதாகும். அவருடைய உள்நிறைந்த மகிமைகளினிமித்தம் அவரையே விரும்புகிறோம். கிறிஸ்துவின் கிருபைகளின் பரிமளமான வாசனை கன்னிகைகளின் இருதயங்களை அவருக்குப் பின்னால் இழுக்கிறது. "உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; …" என்று உன்னதப்பாட்டு 1:3 சொல்லுகிறது. உண்மையான பரிசுத்தவான் தேவன் கொடுப்பவைகளுக்காக மட்டுமல்ல, அவர் யாரென்பதற்காகவே அவரை விரும்புகிறான்; அவருடைய பலன்களுக்காக மட்டுமல்ல, அவருடைய பரிசுத்தத்திற்காகவே ஏங்குகிறான். எந்த மாயக்காரனும் இவ்விதமாய் தேவனை வாஞ்சிக்க முடியாது. அவன் தேவனுடைய ஆபரணங்களை விரும்பலாம்; ஆனால் அவருடைய அழகை அல்ல!

தேவனை நோக்கிய உண்மையான வாஞ்சை தீராததாகும். அது தேவனைத் தவிர வேறொன்றினாலும் திருப்தியடையாது. உலகம் தன் கௌரவங்களையும் ஐசுவரியங்களையும் குவித்தாலும் அவை அவனை நிறைவுபடுத்தாது. தாகமாயிருப்பவனைப் பூக்களாலும் இசையாலும் திருப்திப்படுத்த முடியாததுபோல, கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே ஆத்துமாவின் தாகத்தைத் தீர்க்கும்! அவன் தேவனுக்காக ஏங்கி மங்கிப்போகிறான்; அவன் இருதயம் தேவனை நாடி உடைந்து போகிறது. "என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; …" என்று சங்கீதம் 84:2-லும், "உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது." என்று சங்கீதம் 119:20-லும் சொல்லப்பட்டுள்ளது.

தேவனை நோக்கிய உண்மையான வாஞ்சை செயலுள்ளதாயிருக்கும். அது முயற்சியாக வெளிப்படும். "என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; …" என்று ஏசா 26:9 சொல்லுகிறது. 

உண்மையாய் வாஞ்சிக்கும் ஆத்துமா இவ்வாறு கூறும்:

“நான் கிறிஸ்துவைப் பெற வேண்டும்!

நான் கிருபையைப் பெற வேண்டும்!

நான் பரலோகத்தை அடைய வேண்டும்!

அதைப் பலவந்தமாகப் பற்றிக்கொள்ள வேண்டியிருந்தாலும் அடைந்தே தீருவேன்!”

தேவனை நோக்கிய உண்மையான வாஞ்சை உயர்ந்ததாயிருக்கும். நாம் கிறிஸ்துவை உலகத்தைவிட மேலாக மட்டுமல்ல, பரலோகத்தைக்காட்டிலும் மேலாக வாஞ்சிக்கிறோம்! "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை." சங் 73:25 சொல்லுகிறது. கிறிஸ்து இல்லாத பரலோகம்கூட திருப்தியளிக்காது. மகிமையின் மோதிரத்தில் பதிக்கப்பட்ட வைரம் கிறிஸ்துவே!

தேவனை நோக்கிய உண்மையான வாஞ்சை வளருகிறதாயிருக்கும். தேவனுடைய, சிறிதளவாவது போதும் என்று பரிசுத்தமான ஆத்துமா நினைக்காது; அது இன்னும் அதிகமாகவே விரும்பும். தாகமாயிருக்கும் பயணிக்குச் சிறிதளவு தண்ணீர் போதாததுபோல, ஒரு கிறிஸ்தவன் கிருபையின் மிகச் சிறிய அளவிற்கும் நன்றியுள்ளவனாயிருந்தாலும், மிகுந்த அளவிலான கிருபையினாலும் திருப்தியடைவதில்லை. அவன் இன்னும் அதிகமான கிறிஸ்துவையும், அவருடைய ஆவியையும் தாகமாய் விரும்புகிறான். ஒரு பரிசுத்தவான் இன்னும் அதிகமான அறிவையும், பரிசுத்தத்தையும், கிறிஸ்துவின் சமுகத்தையும் விரும்புகிறான். கட்டளையின் வலைக்கம்பியின் வழியே கிறிஸ்துவை ஒரு கணம் காண்பது இன்பமானதே; ஆனால் அவரை முகமுகமாகக் காணும்வரை ஆத்துமா ஏங்குவதை நிறுத்தாது! மகிமையில் கிருபை பூரணமாக்கப்பட வேண்டும் என்று அது விரும்புகிறது. தேவனுடைய இனிமையில் முற்றிலும் ஆழ்த்தப்பட வேண்டும் என்று அது ஏங்குகிறது. தேவனிலே முற்றாக விழுங்கப்பட்டு, அவருடைய வலதுகரத்திலிருந்து ஓடுகிற அந்த இன்பத்தின் நறுமணமுள்ள நீர்நதிகளில் என்றென்றும் மூழ்கியிருக்க நாம் விரும்புகிறோம்!

நிச்சயமாக, தேவனை நோக்கிய இந்த மனப்பூர்வமான வாஞ்சை, கிருபையின் ராஜ்யம் நம்முடைய இருதயங்களில் வந்திருக்கிறது என்பதற்கான பாக்கியமான அடையாளமாகும். இந்த நாடியின் துடிப்பு ஜீவனை வெளிப்படுத்துகிறது! தேவனை நோக்கிய வாஞ்சைகள்—தேவனிடமிருந்தே உண்டாகின்றன. இரும்பு தன் இயல்புக்கு விரோதமாக மேலே இழுக்கப்பட்டால், அதை ஏதோ ஒரு காந்தம் இழுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாயிருக்கும். அதுபோலவே, ஆத்துமா மனப்பூர்வமான வாஞ்சைகளோடு தேவனை நோக்கி நகர்ந்தால், பரிசுத்த ஆவியின் காந்தம் அதனை இழுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாயிருக்கும்!

"அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, …" (சங்கீதம் 145:19)


Comments

Popular posts from this blog

உண்மையான மனமாற்றம். - சார்ல்ஸ் எச் ஸ்பர்ஜன். True Repentance - Charles H Spurgeon. (1834 - 1892)

கனி தரும் கிறிஸ்தவத்தின் நான்கு அடையாளங்கள் - ஜே. சி. ரைல். Four Marks of Fruit-Bearing Christianity - J.C. Ryle. ( 1816 - 1900)

நாம் தேவன் மீது அன்பு செலுத்துகிறோமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? - தாமஸ் வாட்சன். How May We Know Whether We Love God? - Puritan Thomas Watson (1620-1686)